இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் : டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் சூர்யகுமார் யாதவ்!
நாக்பூரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் டெஸ்ட் தொப்பியைப் பெற்றார். சூர்யகுமார் ஏற்கனவே டி20 வடிவத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜொலிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். முன்னதாக, அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் பங்கேற்க முடியாத சூழலில் சூர்யகுமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடரில் ரிஷப் பந்தும் இல்லாத நிலையில், சுழற்பந்துவீச்சை சமாளிக்க வேண்டிய மிடில் ஆர்டர் இடத்தில் களமிறங்கும் சூர்யகுமார் ஜொலிப்பாரா என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் அறிமுகம்
கிரிக்கெட்டில் சூர்யகுமார் செயல்திறன்
32 வயதான சூர்யகுமார் 2010 இல் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். அங்கு 79 போட்டிகளில் 5,549 ரன்கள் எடுத்துள்ளார். 44.75 என்ற நல்ல சராசரியுடன் 14 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களையும் அடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி சீசனில் மூன்று இன்னிங்ஸ்களில் சேர்த்து மொத்தம் 223 ரன்கள் எடுத்தார். இது தவிர டி20 கிரிக்கெட்டில் அசத்தலான பேட்டராக வலம் வருகிறார். ஒட்டுமொத்தமாக, அவர் 48 டி20 போட்டிகளில் 46.53 என்ற சராசரியுடன் (அரைசதங்கள்: 13, சதங்கள்: 3) 1,675 ரன்களை எடுத்துள்ளார். 175.76 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் இதை எடுத்துள்ளார். இதற்கிடையில், அவர் 20 ஒருநாள் போட்டிகளில் 28.87 என்ற சராசரியுடன் (அரைசதங்கள்: 2) 433 ரன்கள் எடுத்துள்ளார்.