அந்த ஒரு கேட்ச்.. கோப்பை நமக்கே; 2024 உலகக்கோப்பையில் சூர்யகுமார் செய்த மேஜிக்; தென்னாப்பிரிக்காவின் வெற்றியைத் தட்டிப்பறித்த வரலாற்றுத் தருணம்
செய்தி முன்னோட்டம்
பார்படாஸில் நடைபெற்ற 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த ஒரு ஆட்டமாகும். இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா, ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான நிலையில் இருந்தது. களத்தில் அதிரடி மன்னன் டேவிட் மில்லர் இருந்ததால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நழுவிப் போவதாகவே அனைவரும் கருதினர்.
கேட்ச்
சூர்யகுமாரின் மின்னல் வேக கேட்ச்
கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் பந்திலேயே டேவிட் மில்லர் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்றார். பந்து நேராக லாங்-ஆஃப் திசையில் எல்லையை நோக்கிப் பறந்தது. அங்கே நின்றிருந்த சூர்யகுமார் யாதவ், எல்லைக்கோட்டிற்கு மிக அருகில் பந்தைப் பிடித்தார். ஆனால், தனது உடல் சமநிலை தவறி எல்லைக்கோட்டைத் தாண்டும் என்பதை உணர்ந்த அவர், சாமர்த்தியமாகப் பந்தை அந்தரத்தில் தூக்கிப் போட்டுவிட்டு, வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்தார். இந்தக் கேட்ச் ஒரு விக்கெட் என்பதைத் தாண்டி, இந்தியாவின் 17 ஆண்டுகால உலகக்கோப்பை தாகத்தைத் தீர்க்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மில்லர் அவுட் ஆனதும் தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சரிந்தது.
ஓய்வு
ரோஹித் - விராட்டின் உணர்ச்சிகரமான விடைபெறுதல்
இறுதியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்தனர். "இதுதான் வெற்றிகரமாக விடைபெற சரியான தருணம்" என்று விராட் கோலி ஆட்டநாயகன் விருது வாங்கிய பிறகு நெகிழ்ச்சியுடன் கூறினார். ரோஹித் ஷர்மா மைதானத்தில் மண்டியிட்டு மண்ணை முத்தமிட்ட காட்சி, ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களையும் ஈரமாக்கியது. சூர்யகுமார் யாதவின் அந்த ஒரு கேட்ச், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ் (1983) பிடித்த விவியன் ரிச்சர்ட்ஸ் கேட்சிற்கு இணையாக இன்று கொண்டாடப்படுகிறது.