ஐபிஎல்லில் மறுபிரவேசம்; ஆசையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்எல்சி) வெற்றிகரமாக விளையாடியதைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) திரும்ப விருப்பம் தெரிவித்தார். 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவின் வரவிருக்கும் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் சேர்க்கப்படாத ஸ்டீவ் ஸ்மித், எம்எல்சி தொடரில் களமிறங்கி வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு அவர்களின் முதல் எம்எல்சி பட்டத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். ஸ்மித் தனது அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக தொடரை முடித்துள்ளதோடு, இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸுக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில், ஸ்மித் 52 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஐபிஎல் மறுபிரவேசத்திற்கான ஆசைகள்
ஐபிஎல் தொடர்களைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஏலங்களில் ஒப்பந்தம் பெறத் தவறியதால், 2021 முதல் ஐபிஎல்லில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறவில்லை. இந்த பின்னடைவு மற்றும் இளம் வீரர்களுக்கு ஆதரவான ஆஸ்திரேலிய தேசிய தேர்வாளர்களால் கவனிக்கப்படாமல் இருந்தாலும், அவர் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார். "ஐபிஎல்லில் மற்றொரு வாய்ப்பை நான் நிச்சயமாக விரும்புகிறேன்" என்று ஸ்மித் ஃபாக்ஸ் கிரிக்கெட்டிடம் அளித்த ஒரு பேட்டியில் தற்போது கூறியுள்ளார். சமீபத்திய டி20 கிரிக்கெட் வாய்ப்புகள் மற்றும் லீக் விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டதாக ஸ்மித் அப்போது தெரிவித்தார். ஸ்மித் ஐபிஎல்லில் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 2,485 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை 2017 இறுதிப் போட்டிக்கு வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.