ஊக்கமருந்து சோதனையில் தோல்வி! இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாத தடை!
இந்தியாவின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் 21 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹைஜெனமைன் எனும் ஊக்கமருந்தை உட்கொண்டது தெரியவந்ததை அடுத்து ஜூலை 10, 2023 வரை அவர் விளையாட தடை விதிப்பதாக சர்வதேச சோதனை முகமையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைஜெனமைன் எனும் ஊக்கமருந்து உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தடைசெய்யப்பட்ட பட்டியலில், பீட்டா-2 அகோனிஸ்ட்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து எதிர்ப்பு இலக்கியத்தின்படி, ஹைஜெனமைன் ஒரு பொதுவான தூண்டுதலாக செயல்படுகிறது. இது நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது போட்டியிலும் வெளியேயும் விளையாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தன் மீதான தடை குறித்து கர்மாகர் தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பின்னணி
திரிபுராவைச் சேர்ந்த கர்மாகர் முதன்முதலில் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முக்கிய இடத்தைப் பிடித்து, அனைவரும் அறிந்த வீராங்கனையானார். காமன்வெல்த்தில் அவர் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். அடுத்து 2016 ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக்கில் 4வது இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு உலகக் கோப்பைப் பதக்கம் வென்றார். கர்மாகர் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு 2018 ஆம் ஆண்டு முதல் சிகிச்சையில் இருந்தார். சர்வதேச சோதனை முகமை 11.10.2021 இல் சோதனையை மேற்கொண்ட பிறகு, அவர் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், சோதனை செய்யப்பட்ட தேதியிலிருந்து 21 மாதங்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 10, 2023 வரை தடை விதிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.