LOADING...
MIvsKKR ஐபிஎல் 2026: வான்கடேவில் மிரட்டிய ஷர்துல் தாக்கூர்; மும்பை அணிக்காக அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் வென்று சாதனை
ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகன் விருது வென்று சாதனை

MIvsKKR ஐபிஎல் 2026: வான்கடேவில் மிரட்டிய ஷர்துல் தாக்கூர்; மும்பை அணிக்காக அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் வென்று சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 30, 2026
06:50 am

செய்தி முன்னோட்டம்

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி கடந்த 14 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த சாபத்தை, மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில் முறியடித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிரான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில், மும்பை அணிக்காக அறிமுகமான ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மிக முக்கியப் பங்காற்றினார். தனது துல்லியமான பந்துவீச்சால் கொல்கத்தாவின் டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சவால்கள்

சவால்களை முறியடித்த ஷர்துல் தாக்கூர்

பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே ஆடுகளத்தில் பந்துவீசுவது சவாலானது என்று குறிப்பிட்ட ஷர்துல், "எனக்கு எப்போதும் சவால்கள் பிடிக்கும், அதுதான் என்னைச் செதுக்கியது" என்று பெருமிதத்துடன் கூறினார். பவர்பிளே ஓவர்களில் போல்ட் அல்லது பும்ரா விக்கெட் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்காதபோது ஆறாவது ஓவரை வீசுவது கடினமாக இருந்தது. ஆனால், அந்த இக்கட்டான சூழலில் அதிரடி வீரர் பின்னி ஆலன் (37) மற்றும் கேமரூன் கிரீன் (18) ஆகியோரை வெளியேற்றி ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பினார்.

சொந்த மைதானம்

சொந்த மண்ணில் எமோஷனல் அறிமுகம்

போட்டிக்குப் பின்பு பேசுகையில், "இந்த மைதானம் எனக்கு கசப்பான மற்றும் இனிப்பான நினைவுகளை வழங்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எனது சொந்த மண்ணில் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று ஷர்துல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனது ஆரம்பக் காலங்களில் இதே மைதானத்தில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்து, இன்று அதே அணிக்காக முக்கிய வீரராக உருவெடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் மும்பைக்கு வந்த தனக்கு, முதல் போட்டியிலேயே வாய்ப்பளித்த நிர்வாகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Advertisement

கொல்கத்தா

கொல்கத்தாவின் ரன் குவிப்பும் ரஹானேவின் அதிரடியும்

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, கேப்டன் அஜிங்க்ய ரஹானேவின் (67) அதிரடி மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷியின் (51) அரைசதத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஒரு கட்டத்தில் ரஹானே மிக வலுவாக இருந்தபோது, அவரது விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தாவின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார் ஷர்துல். இறுதியில் 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் 'லார்டு' தாக்கூர்.

Advertisement

ரோஹித் - ரிக்கெல்டன்

ரோஹித் - ரிக்கெல்டன் கொடுத்த மாஸ் தொடக்கம்

221 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு, ரோஹித் சர்மா (78) மற்றும் ரையன் ரிக்கெல்டன் (81) ஜோடி அபாரமான தொடக்கத்தை அளித்தது. இவர்களின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி இன்னும் 5 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டிப்பிடித்தது. 14 ஆண்டுகளில் சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ்

அடுத்த இலக்கு டெல்லி கேப்பிடல்ஸ்

தொடர் தோல்வி என்ற சிக்கலில் இருந்து விடுபட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி ஏப்ரல் 4 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஓப்பனிங் பேட்டர்கள் ஃபார்முக்கு வந்துள்ளது மும்பை அணிக்கு இந்த சீசனில் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

Advertisement