Loading...
அகில இந்திய டென்னிஸ் சங்க தேர்தல்: சானியா மிர்சா, மகேஷ் பூபதி வேட்புமனு, லியாண்டர் பயஸ் விலகல்
அகில இந்திய டென்னிஸ் சங்க தேர்தலில் மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா மனுத்தாக்கல் செய்துள்ளனர்

அகில இந்திய டென்னிஸ் சங்க தேர்தல்: சானியா மிர்சா, மகேஷ் பூபதி வேட்புமனு, லியாண்டர் பயஸ் விலகல்

எழுதியவர் Vasuki
Oct 26, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய டென்னிஸ் ஜாம்பவான்களான மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஆகியோர் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (AITA) தேர்தலில் சிறந்த விளையாட்டு வீரர்கள் (SOM - Sports Person of Outstanding Merit) பிரிவின் கீழ் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வரும் நவம்பர் 7 அன்று நடைபெறவுள்ள இந்தத் தேர்தலின் மூலம் விளையாட்டு நிர்வாகத்தில் அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்கவுள்ளனர். அதேசமயம், மேற்கு வங்க டென்னிஸ் சங்கத்தின் ஆதரவுடன் ஏஐடிஏ தலைவர் பதவிக்கு போட்டியிடத் திட்டமிட்டிருந்த பிரபல வீரர் லியாண்டர் பயஸ், வேட்புமனுப் பட்டியலில் இடம்பெறாததால் அவர் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

லியாண்டர் பயஸ்

தலைவர் பதவியைப் பெற முடியாததன் காரணம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய அளவிலான சங்கத்தின் முக்கியப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதற்கு மாநில அளவிலான சங்கத்தில் குறைந்தபட்சம் ஒரு தவணைக் காலமாவது நிர்வாகியாகப் பணியாற்றியிருக்க வேண்டும்.

அந்தத் தகுதி இல்லாத காரணத்தால், 40 பேர் கொண்ட பட்டியலில் முதல் நிலை வீரராக இடம்பெற்றிருந்த லியாண்டர் பயஸ், எஸ்.ஓ.எம் முறை வாயிலாக மட்டுமே தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால், அப்பிரிவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

இருப்பினும், வரும் நவம்பர் 27 அன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அவரால் மேற்கு வங்க சங்கத்தின் பிரதிநிதியாக மட்டுமே பங்கேற்க முடியும்.

நிர்வாகம்

களமிறங்கும் முன்னாள் வீரர்கள்

ஏஐடிஏ நிர்வாகக் குழுவின் 15 இடங்களுக்கான தேர்தலில் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஆகியோருடன் அங்கிதா பாம்ப்ரி, ஜானகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் விஷால் உப்பல் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

டென்னிஸ் நிர்வாகத்தில் முன்னணி வீரர்கள் இடம்பெறுவது குறித்துப் பேசிய மகேஷ் பூபதி, "விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு மாற்றியமைக்க உயர்மட்ட அளவில் விளையாடிய வீரர்கள் நிர்வாகத்திற்கு வருவது மிகவும் அவசியம்".

"பேட்மிண்டன் விளையாட்டில் புல்லேலா கோபிசந்த் ஏற்படுத்திய மாற்றமே இதற்குச் சிறந்த உதாரணம்" எனக் கூறியுள்ளார்.

திருத்தப்பட்ட விதிகளின்படி பொதுக்குழுவில் ஆண்களுக்கு இரண்டும் பெண்களுக்கு இரண்டுமாக நான்கு இடங்களும், நிர்வாகக் குழுவில் தலா ஓர் இடமும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT