பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா? அவரே கொடுத்த அப்டேட்
நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்பாரா என்பது குறித்த அப்டேட்டை அவரே வெளியிட்டுள்ளார். முன்னதாக, நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 ஒயிட்வாஷ் ஆகி மோசமான தோல்வியைப் பெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்து களமிறங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை நேரடியாக உறுதி செய்ய, இந்த தொடரில் குறைந்தபட்சம் 4-0 என வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ரோஹித் ஷர்மா கருத்து
சமீபத்திய அறிக்கையில், ரோஹித் தனிப்பட்ட காரணங்களால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் பங்கேற்க மாட்டாரா என்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பேசியுள்ளார். அவர், "நான் முதல் போட்டியில் விளையாடுவேனா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் பார்ப்போம்." எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, முதல் டெஸ்டில் ரோஹித் ஷர்மா பங்கேற்காவிட்டால், துணை கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா அணியை வழிநடத்துவார். வரவிருக்கும் தொடரில், ரோஹித் முதற்போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி, அதைத் தொடர்ந்து டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்ட், பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் ஜனவரி தொடக்கம் வரை போட்டிகள் நடைபெறும்.