ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் : கபில்தேவின் சாதனையை சமன் செய்வாரா ஜடேஜா?
இந்திய அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மார்ச் 17-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் புதிய மைல்கல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் 53 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 2,500 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 12-வது ஆல்-ரவுண்டர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதுவரை இந்த சாதனையை படைத்த ஒரே இந்தியர் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த ஜடேஜா எட்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் களமிறங்க உள்ளார்.
இலக்கை எட்டுவாரா ரவீந்திர ஜடேஜா?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இதுவரை 11 வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். அவர்களில் கபில் மட்டுமே இந்தியர் ஆவார். முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், 225 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்கள் மற்றும் 253 விக்கெட்டுகளுடன் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தார். இதற்கிடையில், 11 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம், 200 ஒருநாள் விக்கெட்டுகளை பூர்த்தி செய்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெறுவார். ஏற்கனவே, அனில் கும்ப்ளே (337), ஜவகல் ஸ்ரீநாத் (315), அஜித் அகர்கர் (288), ஜாகீர் கான் (282), ஹர்பஜன் சிங் (269), மற்றும் கபில் (253) ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.