ரஞ்சி கோப்பை 2022-23 : மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் கர்நாடகா!
ரஞ்சி டிராபி 2022-23 அரையிறுதி மோதலின் 2வது நாளில் இன்று (பிப்ரவரி 9) கர்நாடகா சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் வலுவான நிலையில் உள்ளது. மயங்க் அகர்வால் 249 ரன்கள் விளாசி தனது அணிக்கு மிகப்பெரும் முன்னிலையை ஏற்படுத்தினார். மயங்க்குடன் ஷரத் ஸ்ரீனிவாஸ் ஆறாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 117 ரன்களை சேர்த்ததால், கர்நாடகா நிலை சற்று வலுவானது. மயங்க் பின்னர் ஒன்பதாவது விக்கெட்டுக்கு கவேரப்பாவுடன் இணைந்து 91 ரன்கள் சேர்த்தார். இறுதி விக்கெட்டுக்கு மற்றொரு தரமான பார்ட்னர்ஷிப்பை சேர்த்து, கர்நாடகா 407 ரன்களை எடுக்க உதவினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய சௌராஷ்டிரா 76/2 என்ற நிலையில் உள்ளது. வித்வத் கவேரப்பா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
முதல் தர கிரிக்கெட்டில் மயங்க் அகர்வாலின் அசத்தல் செயல்திறன்
இந்த ரஞ்சி சீசனில் கர்நாடக அணியின் கேப்டன் மயங்க் தனது இரண்டாவது இரட்டை சதத்தை விளாசினார். அவர் 429 பந்துகளில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 249 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, நடந்துகொண்டிருக்கும் போட்டியில் இது அவரது மூன்றாவது மூன்று இலக்க ஸ்கோர் ஆகும். மேலும் தனது இரட்டை சதத்தின் போது, மயங்க் டெல்லியின் துருவ் ஷோரியை (859) கடந்து போட்டியில் 900 ரன்களை (935) பூர்த்தி செய்த முதல் பேட்டர் ஆனார். ஒட்டுமொத்தமாக மயங்க் அகர்வால் 6,789 முதல் தர ரன்களை (15 சதங்கள்) குவித்துள்ளார்.