'தல' தோனிக்கு 'இ-சலான்'! ராஞ்சியில் ஓவர் ஸ்பீடில் சென்றதால் ரூ.1,000 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, ராஞ்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்கு அருகே அவரது வாகனம் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றதை அங்குள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்தன. மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ், அதிவேகமாகச் சென்றதற்காக அவருக்கு டிஜிட்டல் முறையில் 'இ-சலான்' அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜார்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் தோனிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. ராஞ்சியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு நிலத்தை, வணிக ரீதியாக பயன்படுத்தியதாக கூறப்படும் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அவர் ரிங் ரோட்டில் உள்ள தனது புதிய பண்ணை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
ஐபிஎல்
ஐபிஎல் 2026-க்கு தயார்
மறுபுறம், 44 வயதான தோனி ஐபிஎல் 2026 தொடருக்காகத் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளார். கடந்த 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இந்த முறை அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சீசனில் 196 ரன்களை 135.17 ஸ்டிரைக் ரேட்டில் குவித்த தோனி, இந்த ஆண்டும் 'அன்கேப்ட்' (Uncapped) வீரராக ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். அவரது அனுபவம் மற்றும் வழிகாட்டுதல் சிஎஸ்கே அணிக்கு இந்த ஆண்டும் பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.