LOADING...
ஐபிஎல் 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் 'திரில்' வெற்றி!
குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தித் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் 2026: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் 'திரில்' வெற்றி!

எழுதியவர் Vasuki Ravichandran
Apr 01, 2026
07:44 am

செய்தி முன்னோட்டம்

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான 4-வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திப் பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முல்லன்பூர் மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அறிமுக வீரராகக் களம் கண்ட ஆஸ்திரேலியாவின் கூப்பர் கானோலி (Cooper Connolly), இக்கட்டான சூழலில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

குஜராத் டைட்டன்ஸ்:

நிதானமான தொடக்கம்:

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கிய கேப்டன் சுப்மன் கில் (39 ரன்கள்) மற்றும் ஜோஸ் பட்லர் (38 ரன்கள்) ஜோடி ஓரளவு சிறப்பான அடித்தளத்தை அமைத்தது. சாய் சுதர்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், பஞ்சாப் அணியின் விஜய் குமார் வைஷாக் துல்லியமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திக் குஜராத்தின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ்:

அறிமுக வீரரின் சாதனை:

163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (7) ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் (27 ரன்கள்) மற்றும் கூப்பர் கானோலி அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் (18), வதேரா (3), ஸ்டோனிஸ் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுமுனையில் கானோலி, 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 165 ரன்கள் எடுத்து, குஜராத் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திப் பஞ்சாப் திரில் வெற்றிபெற்றது.

Advertisement