LOADING...
ஒரே ஆள்... ஆனா ரெண்டு நாடு! டி20 உலகக்கோப்பையில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அந்த 5 வீரர்கள் யார் தெரியுமா?
டி20 உலகக்கோப்பையில் இரண்டு வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடிய வீரர்கள்

ஒரே ஆள்... ஆனா ரெண்டு நாடு! டி20 உலகக்கோப்பையில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அந்த 5 வீரர்கள் யார் தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 05, 2026
12:44 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் தனது வாழ்நாளில் ஏதோ ஒரு நாட்டிற்காக விளையாடுவதையே பெருமையாகக் கருதுவார். ஆனால், சில வீரர்கள் தங்களின் திறமையால் இரண்டு வெவ்வேறு நாடுகளுக்காக உலகக்கோப்பை மேடையில் விளையாடி சாதனை படைத்துள்ளனர். அத்தகைய ஐந்து வீரர்களைப் பற்றி இங்கே காண்போம்.

ரோலோஃப் வான் டெர் மெர்வ்

ரோலோஃப் வான் டெர் மெர்வ் (தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து)

இடதுகை சுழற்பந்து வீச்சாளரான வான் டெர் மெர்வ், தனது சர்வதேச பயணத்தைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார். 2009 மற்றும் 2010 உலகக்கோப்பைகளில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். பின்னர் 2015 இல் நெதர்லாந்து குடியுரிமை பெற்ற பிறகு, அடுத்த மூன்று உலகக்கோப்பைகளில் (2021, 2022, 2024) அந்த அணிக்காகக் களமிறங்கினார். ஒட்டுமொத்தமாக 21 போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

டிர்க் நன்னஸ்

டிர்க் நன்னஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து)

டி20 உலகக்கோப்பையில் இரண்டு நாடுகளுக்காக விளையாடிய முதல் வீரர் என்ற பெருமை டிர்க் நன்னஸையே சாரும். 2009 இல் நெதர்லாந்து அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார். இவரது 150 கிமீ வேகத்தைக் கண்டு வியந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 2010 உலகக்கோப்பையில் இவரைத் தங்கள் அணியில் சேர்த்தது. 2010 தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்தத் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரராகத் திகழ்ந்தார்.

Advertisement

மார்க் சாப்மேன்

மார்க் சாப்மேன் (ஹாங்காங் மற்றும் நியூசிலாந்து)

தற்போது நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக இருக்கும் மார்க் சாப்மேன், முதலில் ஹாங்காங் அணிக்காகத் தான் அறிமுகமானார். 2014 மற்றும் 2016 உலகக்கோப்பைகளில் ஹாங்காங் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு நியூசிலாந்து அணிக்குத் தகுதி பெற்று, 2022 மற்றும் 2024 உலகக்கோப்பைகளில் அந்த அணிக்காகப் பங்கேற்றார். உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 127 ரன்கள் எடுத்துள்ளார்.

Advertisement

டேவிட் வைஸ்

டேவிட் வைஸ் (தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா)

ஆல் ரவுண்டர் டேவிட் வைஸ், தென்னாப்பிரிக்க அணியில் வாய்ப்புகள் குறைந்தபோது நமீபியா அணிக்கு மாறினார். 2016 இல் தென்னாப்பிரிக்காவிற்காக விளையாடிய இவர், 2021, 2022 மற்றும் 2024 ஆகிய மூன்று உலகக்கோப்பைகளிலும் நமீபியாவின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தார். 18 போட்டிகளில் 372 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கோரி ஆண்டர்சன்

கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா)

ஒரு காலத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி மன்னனாகத் திகழ்ந்த கோரி ஆண்டர்சன், சமீபத்தில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். 2014 மற்றும் 2016 உலகக்கோப்பைகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2024 உலகக்கோப்பையில் அமெரிக்க அணிக்காக விளையாடினார். இதுவரை 15 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 179 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார்.

Advertisement