புரோ கபடி லீக் : குஜராத் ஜெயன்ட்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
புரோ கபடி லீக்கின் (பிகேஎல் 10) பத்தாவது சீசன் சனிக்கிழமை (டிசம்பர் 2) தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இரண்டு அணியுமே போட்டியை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும் நிலையில், போட்டி குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத்தில் உள்ள இகேஏ அரினாவில் நடக்க உள்ளது அந்த அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த சீசனில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி சிறப்பாக செயல்பட்ட முன் அனுபவத்தைக் கொண்டுள்ளது. கடந்த சீசனில் மோசமான தோல்வியைத் தழுவிய தெலுங்கு டைட்டன்ஸ் தங்கள் அதிர்ஷ்டத்தை புதுப்பித்து மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அணி வீரர்களின் பட்டியல்
குஜராத் ஜெயன்ட்ஸ்:- ரைடர்ஸ்- சோனு, ஜக்தீப், ராகேஷ், பிரதீக் தஹியா, நிதின். டிஃபெண்டர்கள்- ரவி குமார், சோம்பிர், ஃபசல் அத்ராச்சலி, சௌரவ் குலியா, மனுஜ், தீபக் சிங், நித்தேஷ். ஆல் ரவுண்டர்கள்- நரேந்தர் ஹூடா, ரோஹித் குலியா, விகாஷ் ஜக்லன், ரோஹன் சிங், பாலாஜி டி, அர்கம் ஷேக், முகமது நபிபக்ஷ், ஜிதேந்தர் யாதவ். தெலுங்கு டைட்டன்ஸ்:- ரைடர்ஸ்- பவன் செஹ்ராவத், ரஜ்னிஷ், பிரபுல் ஜவாரே, ஓம்கார் பாட்டீல், ராபின் சவுத்ரி. டிஃபெண்டர்கள்- சந்தீப் துல், பர்வேஷ் பைன்ஸ்வால், கௌரவ் தஹியா, அங்கித், மோஹித் நர்வால், நிதின், அஜித் பவார், மோஹித், மிலாட் ஜப்பாரி. ஆல் ரவுண்டர்கள்- சஞ்சீவி எஸ், ஹமீத் நாடர், ஷங்கர் கடாய், ஓம்கார் ஆர். மோர்.
தெலுங்கு டைட்டன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர்
குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 8 போட்டிகளில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 7 வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், தெலுங்கு டைட்டன்ஸ் மிகவும் பின்தங்கியுள்ளது. எனினும், புரோ கபடி லீக்கில் அதிக தொகைக்கு ஏலம் போன பவன் செஹ்ராவத், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை முதல் முறையாக பிரதிநிதித்துவப்படுத்துவது அந்த அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸைப் பொறுத்தவரை, நட்சத்திர ஆல்ரவுண்டர் ரோஹித் குய்லா மற்றும் இரானி நட்சத்திரம் ஃபாசல் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் நேரம், இடம் மற்றும் நேரடி ஒளிபரப்பு விபரங்கள்
அகமதாபாத்தில் உள்ள இகேஏ அரினாவில் இந்திய நேரப்படி சனிக்கிழமை (டிசம்பர் 2) இரவு 8 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம் மற்றும் ஹாட்ஸ்டாரிலும் நேரடியாக கண்டுகளிக்கலாம். சீசன் 9இல் மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழ் தலைவாஸ் அணியால் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பவன் செஹ்ராவத் அந்த தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே விலகி இருந்தார். அதன் பின்னர் அந்த தொடரில் மீண்டும் பங்கேற்காத அவர், தற்போது குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக களமிறங்க உள்ளார்.