பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்த நிலையில், அடுத்து வந்த தேவ்தத் படிக்கல்லும் டக்கவுட் ஆகி வெளியேறினார். பின்னர் விராட் கோலியும் 5 ரன்களில் வெளியேறிய நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல் . ராகுல் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட அணியை மீட்க போராடினர்.
ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி போராட்டம் வீண்
கே.எல்.ராகுல் ஒருபுறம் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 37 ரன்களில் ரிஷப் பண்டும் அவுட்டானார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானதால், இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே, இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா விளையாடும் லெவனில் சேர்க்கப்படாததும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.