மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜூன் 20 என்பது எப்போதும் மறக்க முடியாத ஒரு நாளாகும். ஏனெனில் இதே நாளில் தான் மூன்று ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினர்.
முன்னாள் கேப்டன்களான ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 1996 ஆம் ஆண்டு இதே நாளில் தங்கள் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய நிலையில், விராட் கோலி 2011 ஆம் ஆண்டு இதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மூன்று பேரும் சேர்ந்து மொத்தமாக 28,979 ரன்களை எடுத்துள்ளதோடு, மூன்று பேட்டர்களும் தலா 100 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடி, இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளனர்.
ganguly dravid debuts in same test
ஒரே போட்டியில் அறிமுகமான கங்குலி, டிராவிட்
1996இல் ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் இங்கிலாந்தில் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக அறிமுகமாகினர்.
இந்த போட்டியில் கங்குலி 301 பந்தில் 131 ரன்களை விளாசிய நிலையில், டிராவிட் 267 பந்தில் 95 ரன்களுடன் தொடக்க போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதற்கிடையில், நவீன கால கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, 2011 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.
கங்குலி மற்றும் டிராவிட்டை போல் அல்லாமல் தனது முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நான்கு மற்றும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆனால் விரைவில் தனது திறமையை மெருகேற்றி, இந்திய அணியின் ஜாம்பவான்களின் ஒருவராக திகழ்கிறார்.