இதே நாளில் அன்று : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர் முதல் சதம் விளாசிய தினம்
இந்திய கிரிக்கெட்டின் உண்மையான மாஸ்டர் பிளாஸ்டர் என வர்ணிக்கப்படும் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை 1971 மார்ச் 21 அன்று இதே நாளில் பதிவு செய்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். மேலும் அவர் தனது முதல் தொடரில் வியக்கத்தக்க வகையில் மொத்தம் 774 ரன்களை எடுத்தார். இந்த போட்டியில் கவாஸ்கர் முதல் இன்னிங்ஸில் 116 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 64 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தார். இறுதியில் போட்டி டிராவில் முடிந்தது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுனில் கவாஸ்கரின் அபார ஆட்டம்
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் முதல் போட்டியில் விளையாடாத நிலையில், நான்கு போட்டிகளில் மூன்று சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் அடித்து 774 ரன்கள் குவித்தார். இதில் சுவாரஸ்யமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது வாயில் பல் வலியுடனேயே பேட்டிங் செய்த கவாஸ்கர் கேரி சோபர்ஸ், லான்ஸ் கிப்ஸ், கீத் பாய்ஸ் மற்றும் ஜாக் நோரிகா போன்ற திறமையான பவுலர்களை எதிர்கொண்டு 116 ரன்கள் எடுத்தார். கவாஸ்கரின் அபார ஆட்டத்தால் இந்தியா தனது முதல் டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகளில் வென்றது. பின்னர் 2006 வரை இந்த சாதனையை இந்தியாவால் எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.