சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சவுதி
நியூசிலாந்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நியூசிலாந்து கிரிக்கெட் கேப்டன் டிம் சவுதி 700 சர்வதேச விக்கெட்டுகளை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணியின் பென் டக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், தனது 353வது போட்டியில் இதை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் நியூசிலாந்துக்காக 700 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் டிம் சவுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 18 முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரியும் 705 விக்கெட்டுகளை பெற்றிருந்தாலும், அவர் நியூசிலாந்து அணிக்காக 696 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுளளார். எஞ்சிய ஒன்பது விக்கெட்டுகளை ஐசிசி உலக லெவன் அணிக்காக எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் டிம் சவுதியின் புள்ளி விபரங்கள்
சவுதி 2008ல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். டி20யில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் 154 ஒருநாள் போட்டிகளில் 210 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்கிடையில், அவர் தற்போது 92 டெஸ்ட் போட்டிகளில் 356 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பந்துவீச்சு ஜாம்பவான்களான டென்னிஸ் லில்லி மற்றும் சமிந்தா வாஸ் (தலா 355 விக்கெட்கள்) ஆகியோரை விஞ்சினார். மேலும் 700 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த 10வது வேகப்பந்து வீச்சாளராகவும், ஒட்டுமொத்தமாக 15 வது வீரராகவும் ஆனார்.