'சதத்தை விட அணியின் நிகர ரன்ரேட்டே முக்கியம்' : சாதனை மன்னன் யஜஸ்வி ஜெய்ஸ்வால் பளீச்!
ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிகர ரன் ரேட்டை உயர்த்துவது மட்டுமே தங்கள் மனதில் இருப்பதாக வியாழக்கிழமை (மே 11) தெரிவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 50 ரன்களை எட்டி அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைத்தார். மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்ததோடு, சஞ்சு சாம்சனோடு சேர்ந்து 13.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அணியின் வெற்றிக்கு உதவினார்.
சதத்தை தவறவிட்டது குறித்து பேசிய யஜஸ்வி ஜெய்ஸ்வால்
13 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தது குறித்து பேசிய யஜஸ்வி ஜெய்ஸ்வால், "எப்பொழுதும் என் மனதில் நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. அதற்காக நான் நன்றாக தயார் செய்கிறேன். என்னை நம்புவதால் நல்ல முடிவுகள் வரும் என்று எனக்குத் தெரியும்." என்று கூறினார். சதத்தை 2 ரன்களில் தவறவிட்டது குறித்து பேசிய ஜெய்ஸ்வால், "ரன் ரேட் மட்டுமே எங்கள் மனதில் இருந்தது. நானும் சஞ்சு பாயும் ஆட்டத்தை விரைவாக முடிப்பது பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம்." என்றார். இதற்கிடையே ராஜஸ்தா ராயல்ஸ் தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான அபார வெற்றி அவர்களின் ரன் விகிதத்தையும் +0.633க்கு உயர்த்தியது.