77 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிதிஷ் குமார் ரெட்டி சாதனை
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்டில் தனது முதல் சதத்தை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி எட்டினார். சர்வதேச கிரிக்கெட்டில் நிதிஷ் குமார் ரெட்டி தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியான பெர்த் டெஸ்டில் அறிமுகமானார் மற்றும் தொடரின் நான்கு போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அவர் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்ட நிதிஷ், பாக்சிங் டே டெஸ்டில் முதல் 50+ ஸ்கோரை எட்டியதோடு, அதை சதமாகவும் மாற்றினார்.
ஆஸ்திரேலியாவில் டெஸ்டில் 8வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர்
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 105* ரன்களுடன் களத்தில் உள்ள நிதிஷ் குமார் ரெட்டி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது இடத்தில் களமிறங்கி அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 1947இல் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாட தொடங்கியதில் இருந்து, அங்கு இந்தியர் ஒருவர் 8வது இடத்தில் களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த பட்டியலில் 2008 அடிலெய்டில் 87 ரன்கள் எடுத்த கும்ப்ளே இரண்டாவது இடத்திலும், 2019 சிட்னியில்ல் 81 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மேலும், 2021 பிரிஸ்பேனில்ல் 67 ரன்கள் எடுத்த ஷர்துல் தாக்கூர் நான்காவது இடத்திலும், 1978 சிட்னியில் 64 ரன்கள் எடுத்த கர்சன் காவ்ரி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 8வது இடத்தில் இருக்கும் இந்தியரின் அதிகபட்ச ஸ்கோர்
ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது இடத்தில் களமிறங்கி அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில், நிதிஷ் குமார் ரெட்டி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், முதலிடத்தில் 2017இல் ராஞ்சி மைதானத்தில் 117 ரன்கள் எடுத்த விருத்திமான் சாஹா முதலிடத்தில் உள்ளார். 2008இல் மொகாலி மைதானத்தில் 92 ரன்கள் எடுத்த எம்எஸ் தோனி மூன்றாவது இடத்திலும், அதே ஆண்டு அடிலெய்டு மைதானத்தில் 87 ரன்கள் எடுத்த அனில் கும்ப்ளே நான்காவது இடத்திலும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் 1979இல் சென்னையில் 83 ரன்கள் எடுத்த கபில்தேவ் உள்ளார். இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக சாஹாவின் சாதனையை முறியடிக்க நிதிஷ் ரெட்டிக்கு இன்னும் 13 ரன்கள் மட்டுமே தேவையுள்ளது.