கேமரூனில் ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடிப்பு : 19 வீரர்கள் படுகாயம்!
கேமரூன் நாட்டில் ஒட்டப்பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததில் 19 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேமரூனின் மேற்கு பகுதியில் ஆங்கில மொழி பேசும் பிரிவினைவாதிகள் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் ஒன்றில் 529 விளையாட்டு வீரர்கள் மவுண்ட் கேமரூன் ரேஸில் போட்டியிட்டனர். இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர் கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு கேமரூன் பாதுகாப்பு படைகள் முழுமையான பாதுகாப்பு வழங்கியது. இந்நிலையில் ஓட்டப்பந்தயத்தில் வீரர்கள் ஓடிக்கொண்டிருக்கையில் ஆங்காங்கு பல இடங்களில் சிறிய அளவிலான குண்டுகள் வெடித்துள்ளன.
கேமரூன் ராணுவத்தை குறிவைத்து நடந்த தாக்குதல்
பிரிவினைவாத போராளிக் குழுக்களில் ஒன்றான அம்பாசோனியா ஆளும் குழுவின் ஆயுதப் பிரிவு இந்த குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுள்ளது. "எங்கள் முதன்மை இலக்கு கேமரூன் உயரடுக்கு படைகள். அது விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. கேமரூன் ஆக்கிரமிப்பைத் தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்று குழுவின் செய்தித் தொடர்பாளர் கபோ டேனியல் கூறியுள்ளார். பிரிவினைவாத கிளர்ச்சியானது 2016ஆம் ஆண்டு கேமரூனின் ஆங்கிலம் பேசும் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களில் ஆரம்பமானது. முதன்மையாக பிரெஞ்சு மொழி பேசும் தேசிய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆசிரியர்களும் வழக்கறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்தபோது இது தொடங்கியது. ராணுவத்தின் ஒடுக்குமுறை கிளர்ச்சியை தீவிரமாக்கியது. மேலும் அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.