அறிமுக போட்டியில் விளையாடிய முகேஷ் குமாரை திக்குமுக்காட வைத்த விராட் கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய முகேஷ் குமார், விராட் கோலியின் செய்கையால் நெகிழ்ந்ததாக கூறினார். வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டைப் பெற்ற பிறகு, முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, அவரைத் தழுவ விரைந்தபோது ஒரு அதிசயமான தருணத்தை அனுபவித்ததாக வெளிப்படுத்தினார். பல ஆண்டுகளாக களத்தில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தை டிவியில் மட்டுமே பார்த்து பழகிய முகேஷ் குமாருக்கு, இந்த எதிர்பாராத சைகை நம்ப முடியாததாக அமைந்துள்ளது. முகேஷ் குமார் முதல் இன்னிங்சில் 18 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முகேஷ் குமாரின் பின்னணி
இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தனது 30வது பிறந்தநாளுக்கு சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான முகேஷ் குமார், பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஏழு ஆண்டுகளில் பெங்கால் யு-23 முதல் இந்தியா ஏ வரை படிப்படியாக முன்னேறி, தற்போது இந்திய அணியில் நுழைந்துள்ளார். இன்னிங்ஸ் முடிந்த பிறகு பிசிசிஐ உரையாடலில் முகமது சிராஜிடம் பேசிய முகேஷ் குமார், "நான் விளையாடுவேன் என்று தெரிந்ததும், நான் ஆனந்த அதிர்ச்சியடைந்தேன். உண்மையில் சிறிதுநேரம் முற்றிலும் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். நான் விளையாடினாலும் இல்லாவிட்டாலும், நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். எனவே எனது செயல்முறையை நான் பின்பற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்து அணி கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன்." என்றார்.