Loading...
ரஞ்சி கோப்பை 2026-27: ஹைதராபாத் அணியின் கேப்டனாக முகமது சிராஜ் நியமனம்
ரஞ்சி டிராபி தொடருக்கான ஹைதராபாத் அணியின் கேப்டனாக முகமது சிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி கோப்பை 2026-27: ஹைதராபாத் அணியின் கேப்டனாக முகமது சிராஜ் நியமனம்

எழுதியவர் Vasuki
Sep 12, 2026
12:45 pm

செய்தி முன்னோட்டம்

ரஞ்சி கோப்பை 2026-27 கிரிக்கெட் தொடருக்கான ஹைதராபாத் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ரஞ்சி தொடரிலும் சில ஆட்டங்களில் ஹைதராபாத் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட சிராஜுக்கு மீண்டும் முழு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சாமா மிலிந்த் துணை கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை முதல் ஆட்டத்தில் திரிபுரா அணியை ஹைதராபாத் எதிர்கொள்கிறது.

எலைட் குரூப்

எலைட் குரூப் 'பி' பிரிவில் ஹைதராபாத் அணி

நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் சௌராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய அணிகளுடன் எலைட் குரூப் 'பி' பிரிவில் ஹைதராபாத் அணி இடம்பெற்றுள்ளது.

அண்மையில் திலக் வர்மா தலைமையில் துலீப் டிராபி இறுதி ஆட்டத்தில் விளையாடிய தெற்கு மண்டல அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முகமது சிராஜ் தலைமை தாங்கினார்.

இந்நிலையில் உள்நாட்டுத் தொடரில் தனது சொந்த மாநில அணியான ஹைதராபாத்தை வழிநடத்த உள்ள சிராஜின் தலைமை அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சு

பந்துவீச்சு வேகம் குறித்த சிராஜின் விளக்கம்

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது வழக்கமான 140 கி.மீ வேகத்திலிருந்து 120 கி.மீ அளவுக்கு பந்துவீச்சு வேகம் குறைந்ததாக எழுந்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய சிராஜ், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு களமிறங்கியதால் தனது பந்துவீச்சு ரிதம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.

இலங்கையில் ஓடிவரும் தூரம் சீராக இல்லாததே வேகம் குறையக் காரணம் என்றும், துலீப் டிராபி போட்டிகளின் மூலம் தனது இயல்பான வேகமும் துல்லியமும் மீண்டும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடும் வெயில் மற்றும் பணிச்சுமை இருந்தாலும், நாட்டுக்காகவும் அணிக்காகவும் களமிறங்கும்போது எந்தக் காரணமும் சொல்லாமல் முழு உழைப்பையும் வெளிப்படுத்துவதே தமது நோக்கம் என சிராஜ் தெரிவித்தார்.

ADVERTISEMENT