வெள்ளை சீருடைக்கு Good Bye; டெஸ்ட் போட்டிகளிலிருந்து முகமது ஷமி ஓய்வு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான 36 வயதான முகமது ஷமி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்ட ஷமி, சரியாக 13 ஆண்டுகள் கழித்து அதே நாளில் தனது சிவப்பு பந்து கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு கட்டியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
229 விக்கெட்டுகள்
64 போட்டிகளில் 229 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த சீம் (Seam) பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த முகமது ஷமி, இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி தொடர் வெற்றிகளைக் குவிக்க இவரது வேகம் மற்றும் ஸ்விங் பந்துவீச்சு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் தொடரின் போது அறிமுகமான ஷமி, இந்திய வேகப்பந்து வீச்சின் முகவரியாகத் திகழ்ந்தார்.
ஒருநாள் மற்றும் டி20
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு
தனது ஓய்வு அறிவிப்பில் பேசிய முகமது ஷமி, "வெள்ளை சீருடையை விட்டு விலகினாலும், அதனுடன் இணைந்த நினைவுகளிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன்" என உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே விலகுவதாகவும், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
நன்றி
பிசிசிஐ மற்றும் குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியான நன்றி
தனது 13 ஆண்டுகால நீண்ட பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த பிசிசிஐ, சக வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்டுகள் மற்றும் தனது குடும்பத்தினருக்கு முகமது ஷமி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
காயங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி மீண்டும் மீண்டு வந்த தனது டெஸ்ட் வாழ்க்கையை நினைவுகூர்ந்த அவருக்கு, சமூக வலைதளங்களில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.