2023 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : மொயீன் அலி அறிவிப்பு
இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார். 50 ஓவர் கிரிக்கெட்டில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தனது கடைசி தொடராக இருக்க வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2019 இல் கடைசியாக நடந்த ஒருநாள் உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றுள்ள நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் கோப்பையை வெல்ல விரும்புவதாக மொயீன் அலி தெரிவித்துள்ளார். மொயீன் அலி தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில், மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேச டி20 தொடர்
இங்கிலாந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட வங்கதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த டி20 உலகக்கோப்பையில் பட்டம் வென்ற இங்கிலாந்து, முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவியது. நடப்பு டி20 சாம்பியன் இங்கிலாந்து வங்கதேசத்திடம் தொடரை இழந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்துடன் மோதிய இங்கிலாந்து முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.