ஐபிஎல் 2024 ஏலம் : பாட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் சாதனை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் விளையாட உள்ளார். செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024க்கான ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24.75 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.20.5 கோடிக்கு வாங்கியதே அதிகபட்சமாக இருந்த நிலையில், அதை மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் கடைசியாக 2015 ஆம் ஆண்டுதான் ஐபிஎல் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் செயல்திறன்
மிட்செல் ஸ்டார்க் இதுவரை 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவை அனைத்தும் 2014 மற்றும் 2015 க்கு இடையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியதாகும். அதில் 7.17என்ற எகானமியுடன் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரமாகும். குறிப்பிடத்தக்க வகையில், 2018 ஐபிஎல் ஏலத்தில் விளையாட பதிவு செய்த மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.9.4 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால் உடற்தகுதி பிரச்சனை காரணமாக அந்த சீசனில் இருந்து விலகினார். இந்நிலையில், இந்த முறை அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து மிகப்பெரும் தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.