ஆஸ்திரேலிய அறிமுக கிரிக்கெட் வீரருக்கு டிப்ஸ் கொடுத்த ஜடேஜா
ஆஸ்திரேலியாவின் இடது கை ஆஃப் ஸ்பின்னர் மேத்யூ குஹ்னேமன், இந்திய டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவைச் சந்தித்ததாகவும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பந்துவீச்சு பற்றி ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் தீவிர ரசிகன் என்றும், டெஸ்ட் தொடரில் அவர்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியிருந்தார். பார்டர்-கவாஸ்கர் டிராபி 2023 இல் ஆஷ்டன் அகர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு நீக்கப்பட்டதால் மேத்யூ குஹ்னேமன் டெல்லி இரண்டாவது டெஸ்டில் அறிமுகமானார். குஹ்னேமன் மூன்று போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்தார். அதில் 6 இந்தூர் டெஸ்ட் போட்டியில் எடுத்தார். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா வென்ற ஒரே டெஸ்ட் போட்டி இதுவாகும்.
ஜடேஜாவிடம் மேத்யூ குஹ்னேமன் பேசியது என்ன?
சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னேமன் ஆஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் அளித்த பேட்டியில், ரவீந்திர ஜடேஜாவை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். "15 நிமிடங்கள் பேசியிருப்போம். அவர் எனக்கு சில அற்புதமான குறிப்புகள் கொடுத்தார். நாங்கள் எல்லாவற்றையும் பற்றி பேசினோம்." என்று குஹ்னேமன் கூறினார். நாதன் லியோன் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக கூறினார். டோட் மர்பி மற்றும் நாதன் லியோனுடன் சேர்ந்து குஹ்னேமன் தன்னை ஈர்த்ததாக அப்போது ஜடேஜா கூறியுள்ளார். "அவர் மிகவும் நல்லவர், எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். மேலும் இன்ஸ்டாகிராமில் எனக்கு ஒரு செய்தியும் அனுப்பினார், அதனால் அது மிகவும் அருமையாக இருந்தது" என்று குஹ்னேமன் மேலும் கூறினார்.