சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெருகிறாரா லியோனல் மெஸ்ஸி? முன்னாள் பிஎஸ்ஜி கிளப் வீரர் கொடுத்த பதில்!
கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த பிபா உலகக் கோப்பையை வென்றதன் மூலம் லியோனல் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கை அடைந்தார். இது மெஸ்ஸியின் ஐந்தாவது உலகக்கோப்பை மற்றும் கோப்பையை வெல்வதற்கான அவரது கடைசி முயற்சியாக பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை வெற்றியுடன் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவார் என்று அனைவரும் ஊகித்தனர். ஆனால் அவர் அனைத்து வதந்திகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாடுவதாக தெளிவாகத் தெரிவித்தார். இதற்கிடையே, பிஎஸ்ஜி கிளப்பில் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், முன்னாள் பிஎஸ்ஜி வீரர் லுடோவிக் கியுலி, அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டால் மட்டுமே மெஸ்ஸி பிஎஸ்ஜியில் இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
பிஎஸ்ஜி கிளப்பில் லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியுடனான ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும் அவர் பிஎஸ்ஜியில் தொடர்ந்து தக்கவைக்கப்படுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் எஃப்சி பார்சிலோனாவுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. 2021 இல் பிஎஸ்ஜியில் சேர்ந்த மெஸ்ஸியின் ஒப்பந்தம் ஜூன் 2023 இல் முடிவடைகிறது. அதன் பிறகு அவர் 61 ஆட்டங்களில் 27 கோல்களை அடித்தார். கிளப் போட்டிகளில் 700 கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சேர மெஸ்ஸிக்கு இன்னும் ஒரு கோல் தேவை. தற்போதைய நிலவரப்படி, லியோனல் மெஸ்ஸி 839 கிளப் போட்டிகளில் 699 கோல்களை அடித்துள்ளார்.