இந்தியா vs ஆஸ்திரேலியா : டெஸ்ட் அறிமுகம் உறுதியானதும் உருகிய கே.எஸ்.பாரத்! வைரலாகும் புகைப்படம்!
நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் டெஸ்டில் இஷான் கிஷனுக்கு பதிலாக கோனா ஸ்ரீகர் பாரத் (கே.எஸ்.பாரத்) தேர்வு செய்யப்பட்டதன் மூலம், இந்தியாவுக்காக தனது டெஸ்ட் அறிமுகத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 9) பெற்றார். நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் டாஸ் போடுவதற்கு முன்னதாக, இந்திய அணியில் மூத்த பேட்டர் சேதேஷ்வர் புஜாரா டெஸ்ட் தொப்பியை 29 வயதான அவருக்கு வழங்கினார். கே.எஸ்.பாரத்தின் தாயார் நாக்பூரில் ஸ்டேடியத்தில் இருந்தார். தனது டெஸ்ட் தொப்பியைப் பெற்ற பிறகு, கனவு நனவான மகிழ்ச்சியில் அவர் தாயை அணைத்து மகிழும் புகைப்படம் வெளியாகி, வைரலாகி வருகிறது.
கடும்போட்டிக்கு மத்தியில் வாய்ப்பை பெற்ற கே.எஸ்.பாரத்
இந்தியாவுக்கான டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர்-பேட்டர் இடத்தை ரிஷப் பந்த் உறுதி செய்ததால், கே.எஸ்.பாரத் வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருந்தார். இருப்பினும், 2022 டிசம்பரில் ஒரு கார் விபத்தில் சிக்கி பந்த் சிகிச்சையில் இருப்பதால், 29 வயதில் கே.எஸ்.பாரத் இந்த வாய்ப்பைப் பெற்றார். ஆந்திரா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்துள்ள பாரத், இதுவரை 86 போட்டிகளில் 9 சதங்கள் உட்பட 4,707 ரன்கள் எடுத்துள்ளார். எனினும் தனது அபார விக்கெட் கீப்பிங் திறமைக்காகவே பாரத் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மற்றொரு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் அணியில் சேர்க்கப்பட்டிருந்ததாலும், அவரது விக்கெட் கீப்பிங் திறன் பாரத்துடன் ஒப்பிடும்போது குறைவு என்பதால், பாரத் இந்த வாய்ப்பை பெற்றார்.