ரிஷப் பந்த் கன்னத்தில் பளார்! முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்தால் சர்ச்சை!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வியாழக்கிழமை (பிப்ரவரி 9) அன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ரிஷப் பந்த் கன்னத்தில் பளார் என அறைவேன் என கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏபிபி அன்கட்டில் பேசிய கபில் தேவ், தனக்கு பந்தை மிகவும் பிடிக்கும் என்றும், அவர் குணமடைந்தவுடன் தன்னை கவனித்துக் கொள்ளாததற்காக அவரை ஒரு அறை கொடுக்க விரும்புவதாகவும் கூறினார். ரிஷப் பந்த் தன்னை கவனித்துக் கொள்ளாமல் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கியதால், இந்திய அணி தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்டில் சிக்கலில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
ரிஷப் பந்த் உடல்நிலை
கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மிக அதிவேகமாக சென்ற ரிஷப் பந்தின் கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் பற்றியெரிந்த நிலையில், உயிருக்கு போராடிய ரிஷப் பந்த் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது ரிஷப் பந்த் உடல்நலம் தேறி வருகிறார். எனினும் விபத்திலிருந்து முழுமையாக குணமடைந்து, மீண்டும் அணிக்கு திரும்ப பல மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர் ஆஸ்திரேலிய தொடரை இழப்பதோடு, ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை உலகக்கோப்பை போன்ற பல தொடர்களை இழக்க அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.