பிரான்ஸ் தடை ஓட்ட போட்டியில் தேசிய சாதனையை முறியடித்தார் ஜோதி யர்ராஜி!
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) பிரான்சில் நடந்த எலைட் இன்டோர் டிராக் மிராமாஸ் 60 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி 8.17 வினாடிகளில் இலக்கை எட்டி, தனது முந்தைய சிறந்த 8.18 வினாடி தேசிய சாதனையை மேம்படுத்தினார். இந்த சீசனில் அவர் தனது தேசிய சாதனையை (8.20, 8.18, 8.17) முறியடிப்பது இது மூன்றாவது முறையாகும். இறுதிப் போட்டியில், 23 வயதான ஜோதி சைப்ரஸின் டாஃப்னி ஜார்ஜியோவுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். டாஃப்னி ஜார்ஜியோவும் 8.17 வினாடிகளில் இலக்கை கடந்த நிலையில், வேகமான எதிர்வினை (0.145) நேரத்தின் காரணமாக முதலிடத்தை பிடித்தார். மூன்றாவது இடத்தைப் பிடித்த பிரான்சின் சச்சா அலெஸாண்ட்ரினி 8.20 வினாடிகளில் இலக்கை எட்டினார்.
தடகள வீராங்கனை ஜோதி யர்ராஜியின் பின்னணி
ஆந்திராவில் மிக எளிய பின்னணியில் இருந்து வந்த ஜோதி, 2015 ஆம் ஆண்டில், மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு கவனத்திற்கு வந்தார். அடுத்த ஆண்டு, ஒலிம்பியன் மற்றும் துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் என்.ரமேஷின் கீழ் ஹைதராபாத்தில் பயிற்சி பெற ஆரம்பித்தார். மே 10, 2022 இல் லிமாசோலில் நடந்த சைப்ரஸ் சர்வதேச தடகளப் போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை பெற்ற ஜோதி, அங்கு 13.23 வினாடிகளில் இலக்கை எட்டி பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தேசிய சாதனையைப் பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ஜோதி, அடுத்த வாரம் (பிப்ரவரி 10-12) கஜகஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய உட்புற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளார்.