சுவிட்சர்லாந்து சுற்றுலா நட்புறவு தூதரானார் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்!
செய்தி முன்னோட்டம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், உலகக் கோப்பை வென்ற அணியின் முக்கிய உறுப்பினருமான ஜெமிமா ரோட்ரிக்ஸ், சுவிட்சர்லாந்து சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இந்திய நட்புறவுத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் நாயகன் நீரஜ் சோப்ராவுக்குப் பிறகு, இந்த உயரிய பொறுப்பில் இணையும் இரண்டாவது முன்னணி இந்திய விளையாட்டுப் பிரபலம் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நியமனம்
சுவிட்சர்லாந்து சுற்றுலாவின் புதிய தூதர்
தி ஹண்ட்ரட் தொடரின் போது ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக ஆசியக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட முடியாமல் ஓய்வில் இருக்கும் ஜெமிமா, தற்போது முழுமையாகக் குணமடைந்து வருகிறார்.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் சுவிட்சர்லாந்து சுற்றுலா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் நைடெக்கர் முன்னிலையில் இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தனது உற்சாகமான ஆளுமை மற்றும் துடிப்பான அணுகுமுறை மூலம் இந்திய இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தத் தூதர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத் திட்டம்
சாகசச் சுற்றுலாப் பிரச்சாரம் தொடக்கம்
இந்த நிகழ்வின் போது சுவிட்சர்லாந்து சுற்றுலாவின் புதிய பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டது.
அதில் சூரிச் மற்றும் இன்டர்லேக்கன் போன்ற அழகிய நகரங்களை ஜெமிமா சுற்றிப்பார்ப்பதுடன், ஜெட்போட் சவாரி, சுவிஸ் சாக்லேட் தயாரிப்பு மற்றும் பனிபடர்ந்த ஆல்ப்சின் ஜங்ஃப்ராவ்ஜோக் போன்ற இடங்களின் சாகசங்களை அனுபவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனக்கு எப்போதுமே பெருமைக்குரிய ஒன்று என்று நெகிழ்ச்சி தெரிவித்த ஜெமிமா, பாரம்பரிய வழிகாட்டி சுற்றுப்பயணங்களைத் தாண்டி, தனித்துவமான அனுபவங்களை விரும்பும் இளம் இந்தியப் பயணிகளுக்கு சுவிட்சர்லாந்தின் நான்கு பருவங்களின் அழகையும் கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் பாலமாகத் தான் செயல்படவுள்ளதாகத் தெரிவித்தார்.