ஜடேஜாவின் இடத்தை நிரப்ப சிஎஸ்கே மாஸ்டர் பிளான்: ரூ.2 கோடி மதிப்புள்ள சாய் கிஷோரை ரூ.10 கோடிக்கு வாங்க திட்டம்
செய்தி முன்னோட்டம்
ரவீந்திர ஜடேஜா விலகிய பிறகு கடந்த 2026 ஐபிஎல் சீசனில் சரியான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2027 சீசனுக்காக தீவிர டிரேடிங் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. முதலில் அக்சர் படேலை வாங்க முயன்ற முயற்சி கடைசி நேரத்தில் கைகூடாத நிலையில், குஜராத் டைடன்ஸ் அணியிலுள்ள தமிழக வீரர் சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குஜராத் அணியில் ரூ.2 கோடி மதிப்பில் தக்கவைக்கப்பட்டிருந்த சாய் கிஷோரை, டிரேடிங் முறையில் ரூ.10 கோடி கொடுத்து வாங்க சிஎஸ்கே சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இழுபறி
பேச்சுவார்த்தைக்குப் பின் சுமூக முடிவு
ஆரம்பத்தில் சாய் கிஷோர் மற்றும் ரபாடா ஆகிய இருவரையும் தருவதாகவும், அதற்கு பதிலாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தருமாறும் குஜராத் டைடன்ஸ் நிர்வாகம் நிபந்தனை விதித்ததால் பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நீடித்தது.
இருப்பினும், ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் மானவ் சுதார் ஆகியோர் இருப்பதால் குஜராத் அணியில் சாய் கிஷோருக்கு தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால், சாய் கிஷோரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, வீரர் மாற்றத்திற்கு பதிலாக ரூ.10 கோடி தொகைக்கு மட்டும் அவரை சிஎஸ்கே அணிக்கு விடுவிக்க குஜராத் நிர்வாகம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
வாய்ப்பு
மீண்டும் தாய்வீடு திரும்பும் கிஷோர்
2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் ரூ.20 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த சாய் கிஷோர், 2022-இல் ரூ.3 கோடிக்கு குஜராத் அணிக்குச் சென்ற நிலையில் தற்போது மீண்டும் சென்னை அணிக்குத் திரும்புகிறார்.
சேப்பாக்கம் மைதானம் சாய் கிஷோருக்கு மிகவும் பழக்கப்பட்ட மைதானம் என்பதால், சிஎஸ்கே அணியில் அவருக்குத் தொடர்ச்சியாகப் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பிப்ரவரி வரை ஐபிஎல் டிரேடிங் சாளரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கேவில் சிறப்பாகச் செயல்பட்டு விரைவில் இந்திய டி20 அணியிலும் சாய் கிஷோர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.