ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா? சஸ்பென்ஸ் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி எம்எஸ் தோனியின் இறுதி முடிவிற்காக காத்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணிக்காக எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறோம் என்று அணி உரிமையாளரின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இறுதி முடிவு எம்எஸ் தோனியிடமே உள்ளது. இதைப் பற்றி எம்எஸ் தோனி இந்த மாதம் விவாதிப்பார் என்று காசி விஸ்வநாதன் சமீபத்தில் கூறினார். மெகா ஏலத்திற்கு முன்னதாக, வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை சமர்பிப்பதற்கான காலக்கெடுவான அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தனது முடிவை அறிவிப்பதாக தோனி உறுதியளித்ததாக விஸ்வநாதன் தெரிவித்தார்.
புதிய பிசிசிஐ விதி தோனியின் முடிவை பாதிக்கலாம்
எம்எஸ் தோனி இறுதி முடிவை தெரிவிக்காத நிலையில், இது சிஎஸ்கே மற்றும் அவர்களது ரசிகர்களை அவரது அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில் வைத்திருக்கிறது. முன்னதாக, ஐபிஎல் 2025க்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய தக்கவைப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஐந்து ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர் ₹4 கோடிக்கு அன்கேப்ட் வீரராக தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்த விதி மாற்றம் சிஎஸ்கே உடனான அவரது எதிர்காலம் குறித்த தோனியின் முடிவை மாற்றக்கூடும். மேலும் அவரை மற்றொரு சீசனில் விளையாட அனுமதிக்கலாம். இதற்கிடையே, எம்எஸ் தோனி 2025 சீசனில் பங்கேற்பார் என்றும், இந்த சீசனுக்கு பிறகு ஓய்வு பெறுவார் என்றும் சிஎஸ்கே வட்டாரங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறப்படுகிறது.