ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடரும் குமார் சங்கக்கார
ஐபிஎல் 2023 தொடரில் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் அவருக்கு உதவியாக ட்ரெவர் பென்னி செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் திங்களன்று (மார்ச் 20) அறிவித்தது. மற்றொரு இலங்கை ஜாம்பவானான லசித் மலிங்கா வேகப்பந்து பயிற்சியாளாகவும், ஜூபின் பருச்சா உத்தி, மேம்பாடு மற்றும் செயல்திறன் இயக்குநராகவும், கில்ஸ் லிண்ட்சே பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்தின் தலைவராகவும் நீடிக்கின்றனர். மேலும் துணைப் பயிற்சியாளராக சித்தார்த்த லஹிரி மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக திஷாந்த் யாக்னிக் ஆகியோரும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
மன செயல்திறன் பயிற்சியாளராக மோன் ப்ரோக்மேன் நியமனம்
ஜான் க்ளோஸ்டர் தலைமை பிசியோவாகவும், டாக்டர் ராப் யங் குழு மருத்துவராகவும் ஏடி ராஜாமணி பிரபு வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் பணியமர்த்தியுள்ளது. மேலும் அணியின் மன செயல்திறன் பயிற்சியாளராக மோன் ப்ரோக்மேன் பணியமர்த்தப்பட்டுள்ளார். ப்ரோக்மேன், முன்பு பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார். மனநலம் சீரமைக்க உதவுவதற்காகவும், அழுத்தமான சூழ்நிலைகளில் வீரர்கள் முடிவெடுப்பதில் உதவுவதற்காகவும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸில் இணைகிறார். நீல் பாரி உதவி பிசியோவாக பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் கரீபியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸின் இணை அணியான பார்படாஸ் ராயல்ஸில் பணிபுரிந்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பிசியோ ஜான் க்ளோஸ்டருக்கு உதவ உள்ளார்.