ஆர்சிபி அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியின் போது குறைந்த ஓவர் ரேட்டைப் பராமரித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஐபிஎல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "திங்களன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2023 போட்டி 15-ன் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மெதுவாக ஓவர் ரேட்டைப் பராமரித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் அணியின் முதல் குற்றமாக இது இருந்ததால், கேப்டன் பாப் டு பிளெசிஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது." எனத் தெரிவித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் ஆவேஷ் கானுக்கு எச்சரிக்கை
இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றதை அடுத்து அந்த அணியின் 11வது வீரராக களமிறங்கிய அவேஷ் கான், உற்சாகத்தில் தனது ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார். இது ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.2 நிலை 1 குற்றமாக கருதப்படுவதால், ஆவேஷ் கானை கண்டித்துள்ளது. ஆவேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் எதுவும் விடுக்கப்படாமல் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நடத்தை விதியின் நிலை 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.