'கரணம் தப்பினால் மரணம்' : கடுமையாக போராடும் ஐபிஎல் அணிகள்! பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு?
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகளை உறுதி செய்ய முடியாமல் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது குஜராத் டைட்டன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 13 புள்ளிகளை கொண்டிருந்த நிலையில், இன்னும் மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும் நிலையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் 11 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இருந்தாலும், அது கடைசி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கடுமையாக போராட வேண்டிய நிலையில் உள்ளது.
10 புள்ளிகளுடன் சமநிலையில் 4 அணிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நிகர ரன்ரேட்டில் மாறுபட்டிருந்தாலும், 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. மேலும் கடைசி 3 இடங்களில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் 8 புள்ளிகளுடன் உள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளதால், இந்த போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றி தோல்விகளின் அடிப்படையிலேயே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் இறுதி வடிவம் பெறும் நிலை தற்போது உள்ளது. இதனால் கடைசி நேரம் வரை பிளேஆஃப் பரபரப்பு நீடிக்கும் எனக் கூறப்படுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.