ஐபிஎல் 2023 : பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? தற்போதைய நிலவரம் இது தான்!
ஐபிஎல் 2023 இன் 56வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிளேஆப் வாய்ப்புகளை வலுப்படுத்தும் முயற்சியை முறியடித்து, சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸை விட மூன்று புள்ளிகள் மட்டுமே பின்தங்கி 12 புள்ளிகளுடன் உள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் கைவசம் உள்ள நிலையில், பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியும் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆர்சிபி, எல்எஸ்ஜி, எம்ஐ, கேகேஆர் அணிகளின் நிலவரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 11 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ள நிலையில், ஆர்சிபி, கேகேஆர் மற்றும் பிபிகேஎஸ் அணிகள் 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் தங்களுடைய எஞ்சிய போட்டிகளில் முழுமையாக வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்பதால் மிகவும் சிக்கலான நிலைமை நீடிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே பிளேஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்ட நிலையில், மற்ற அனைத்து அணிகளும், இதன் பின்னர் நடக்கும் போட்டிகளில் பெறும் வெற்றி, தோல்விகளின் அடிப்படையிலேயே பிளே ஆப் செல்லும் அணிகள் உறுதி செய்யப்படும் நிலைமை உள்ளது.