ஐபிஎல் 2026: சின்னசாமி மைதானத்தில் ஏஐ கண்காணிப்பு மற்றும் புதிய பாதுகாப்புத் திட்டங்கள்!
செய்தி முன்னோட்டம்
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மைதானம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கூட்ட நெரிசலை கண்காணிப்பதோடு, சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தையும் உடனுக்குடன் பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கும். மைதானத்தின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகளில் நெரிசலைத் தவிர்க்க, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு பேர்தான் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற 'Crowd Cap' முறை அமல்படுத்தப்பட உள்ளது.
பெங்களூரு
கூட்டத்தைக் கட்டுப்படுத்த பிற ஏற்பாடுகள்
டிக்கெட் சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்புச் சோதனையின் போது ரசிகர்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, மைதானத்திற்கு வெளியே நிழற்குடைகளுடன் கூடிய பெரிய 'தங்குமிடங்கள்' அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ரசிகர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர காலங்களில் மைதானத்தை மிக விரைவாக (8-10 நிமிடங்களுக்குள்) காலி செய்யும் வகையில் கூடுதல் வழித்தடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, கழிவறைகள் மற்றும் பிற தேவைகளுக்குச் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்தவும், ரசிகர்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் சொந்த மைதானமான இங்கு, ரசிகர்களின் பாதுகாப்பிற்கு உச்சகட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.