இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது டி20I: ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்கள் இலக்கு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் அரங்கில் இன்று(டிசம்பர் 1) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களும் எடுத்த பின்னர் அவுட்டாகி வெளியேறினர். 10 ஓவரின் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்திருந்தது.
நின்று விளையாடி அசத்திய ரிங்கு சிங்
ஷ்ரேயாஸ் ஐயருக்கு பின் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் வெறும் 1 ரன் எடுத்தவுடன் அவுட் ஆனார். அதனையடுத்து, களமிறங்கிய ரிங்கு சிங், நின்று விளையாடி 46 ரன்கள் எடுத்து குவித்தார். ரிங்கு சிங்குக்கு ஜோடியாக பேட்டிங் செய்த ஜிதேஷ் சர்மா 35 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். கடைசி 3 ஓவர்களின் போது பேட்டிங் செய்ய களமிறங்கிய அக்சர் படேலும் தீபக் சாஹரும் ஒரு ரன் கூட அடிக்காமல் அவுட்டாகி வெளியேறினர். ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் பந்து வீசிய பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்பும் தன்வீர் சங்காவும் தலா 2 விக்கெட்டுகளையும் தட்டி தூக்கினர். 20 ஓவர்களின் முடிவில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.