INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு 277 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் ஸ்டார்க்கை முகமது ஷமி முதல் ஓவரிலேயே அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு சுதாரித்துக் கொண்ட டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். டேவிட் வார்னர் அரைசதம் கடந்து 52 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களுக்கு அவுட்டானார்.
முகமது ஷமி அபார பந்துவீச்சு
டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் வெளியேறிய நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 39 ரன்களும், கேமரூன் கிரீன் 31 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களும் எடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டோனிஸ் 29 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் கடைசி வரை அவுட்டாகாமல் 21 ரன்கள் சேர்த்தார். இதற்கிடையே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் சேர்த்தது. இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது 5 விக்கெட்டுகளாகும்.