2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் காணும் 4 இந்திய தாய்மார்கள்
பெண்களுக்கு, குறிப்பாக இந்தியாவில், மகளிர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு வேலைக்குத் திரும்புவது கடினமான பணியாகும். அதில் விளையாட்டுத் துறையில் திருமணம் முடிந்த வீராங்கனைகளை பார்ப்பது அரிதாகவே பல காலம் இருந்து வந்தது. இந்த விஷயத்தில் அனைவரும் அறிந்த முகங்களாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மட்டுமே இருந்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் இந்த விதியை மாற்றி அமைத்துள்ளனர். செப்டம்பர் 23 ஆம் தேதி சீனாவின் ஹாங்சோவில் தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தாய்மார்களைப் பற்றிய ஒரு பார்வை இங்கே:-
தீபிகா பல்லிகல் (ஸ்குவாஷ்)
ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவின் அடையாளமாக திகழும் தீபிகா பல்லிகல், நாட்டிற்காக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். காமன்வெல்த் விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், ஸ்குவாஷ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அக்டோபர் 2021இல், அவருக்கும் அவரது கணவர் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும் கபீர் மற்றும் ஜியான் என்ற இரட்டை ஆண் குழந்தை பிறந்தன. எனினும் சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் மைதானத்திற்கு வந்த தீபிகா 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
கோனேரு ஹம்பி (செஸ்)
கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி இந்தியாவின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் 2002இல் 15 ஆண்டுகள், ஒரு மாதம், 27 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை எட்டிய இளம்பெண் ஆனார். மேலும் 2,600 எலோ மதிப்பீட்டைக் கடந்த இரண்டாவது பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றார். அவர் 2017இல் தனது மகள் அஹானாவைப் பெற்றெடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மகப்பேறு ஓய்வுவுக்காக சில காலம் செஸ் போட்டியிலிருந்து விலகி இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2019இல் மீண்டும் செஸ் போட்டியில் களமிறங்கி பெண்கள் உலக ரேபிட் சாம்பியன் பட்டம் வென்றார். 36 வயதான அவர் ஒற்றையர் மற்றும் குழு நிகழ்வுகளில் ஹாங்சோவில் இந்தியாவுக்காக போட்டியிடுகிறார்.
ஹரிகா துரோணவல்லி (செஸ்)
இந்திய கிராண்ட்மாஸ்டர் ஹரிகா துரோணவல்லி மூன்று முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவர் ஆவார். 32 வயதான அவர் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு உத்வேகமாக உள்ளார். ஹரிகா கடந்த ஆண்டு கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் உயர் அழுத்த செஸ் ஒலிம்பியாட் விளையாடியது குறிப்பிடத்தக்கது. கோனேரு ஹம்பி, ஆர் வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோருடன், ஹரிகா செஸ் ஒலிம்பியாட் மகளிர் அணியில் பெண்கள் பிரிவில் இந்தியாவுக்காக முதன்முறையாக வெண்கலம் வென்றிருந்தார். இந்த தொடருக்கு சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஹன்விகா என்ற பெண் குழந்தை பிறந்தது. 2010 குவாங்சோ விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற அவர், இந்த முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்)
பாட்டியாலாவில் உள்ள சஹௌலி கிராமத்தைச் சேர்ந்த மன்பிரீத் கவுர் குண்டு எறிதலில் சர்வதேச அளவில் தனி முத்திரை பதித்துள்ளார். அவர் 2010இல் டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் அவர் தனது திருமணம் மற்றும் அவரது மகள் ஜஸ்னூர் பிறந்ததைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுத்தார். அதன் பின்னர், அவர் 2016இல் போட்டி அரங்கிற்கு திரும்பினார் மற்றும் ரியோ 2016 ஒலிம்பிக்கிற்கு குண்டு எறிதலில் தகுதி பெற்ற ஒரே இந்திய பெண்மணி ஆனார். 2017 ஜூலையில் கவுர் நான்கு வருட ஊக்கமருந்து தடையை எதிர்கொண்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்