SAFF கோப்பை: 'வந்தே மாதரம்' பாடி, இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்
தெற்காசிய நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட ஒன்பதாவது SAFF கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நேற்று இந்தியா மற்றும் குவைத் அணிகள், பெங்களூருவின் காண்டீராவா மைதானத்தில் பலப்பரீட்சை செய்தன. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும், தலா 1-1 என, சமஅளவிலான கோல்களை அடித்திருக்கவே, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததைத் தொடர்ந்து, பெனால்டி ஷூட்டவுட்டுக்குச் சென்றது போட்டி. பெனால்டி ஷூட்டவுட்டிலும் இரு அணிகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஐந்து வாய்ப்புகளில் நான்கை கோலாக்கி, 4-4 என சரிசமமாக முடித்தன. இதனைத் தொடர்ந்து, சடன் டெத் விதிமுறை அமலுக்கு வந்தது. குவைத்தின் பெனால்டி ஷூட்டை இந்திய கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் தடுக்க, இந்தியாவிற்கான வாய்ப்பை, மகேஷ் சிங் கோலாக்க, இறுதிப்போட்டியை வென்றது இந்தியா.
வந்தே மாதரம் பாடலைப் பாடி கொண்டிடாடிய ரசிகர்கள்:
இறுதிப்போட்டியை இந்தியா வென்றதைத் தொடர்ந்து மைதானமே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த வேளையில், இந்திய வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், வெற்றி பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாவும் 'வந்தே மாதரம்' பாடலை பாடினர் ரசிகர்கள். மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடிய அந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தாங்கள் விளையாடிய பெரும்பான்மையான போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, இந்திய கால்பந்து அணி. தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் இந்திய கால்பந்து அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே இந்தக் கோப்பை பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மூலைகளிலும் இருக்கும் மக்களிடமும் கால்பந்தை கொண்டு சேர்க்க இந்த வெற்றி உதவும்.