சஞ்சு சாம்சனின் ஆட்டமே திருப்புமுனை, கௌதம் கம்பீர் நெகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
2026-ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ஒரு முக்கிய தருணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பகிர்ந்து கொண்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்கள் தான் இந்தத் தொடரின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார். 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய போது, சஞ்சு சாம்சன் காட்டிய நிதானமும் தன்னம்பிக்கையும் ஒட்டுமொத்த அணியின் மனநிலையை மாற்றியதாக அவர் கூறினார்.
கம்பீர்
சாம்சனுக்கு கம்பீர் புகழாரம்
"தனிப்பட்ட சாதனைகளை விட, அணியின் வெற்றிக்காகத் தாக்கம் ஏற்படுத்துவதே முக்கியம் என்ற எங்களது கொள்கைக்கு சஞ்சுவின் ஆட்டம் ஒரு சிறந்த உதாரணம்" என கம்பீர் புகழ்ந்துள்ளார். இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றிக்கு பிறகே, இந்திய அணி ஒரு பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். வீரராக மட்டுமின்றி பயிற்சியாளராகவும் உலகக் கோப்பையை வென்ற பெருமையை கம்பீர் இதன் மூலம் பெற்றுள்ளார். "இந்திய ஜெர்சியை அணிந்து நாட்டுக்காகப் பணியாற்றுவது ஒரு வரம். இந்த வெற்றியை ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மண் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன்" என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்
ஆதிக்கம் செலுத்திய இந்தியா
இந்த உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக கோப்பை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக இந்தியாவும் கூறப்பட்டது. பயமில்லாத அணியாக, அதிரடியாக ஆடக்கூடிய அணியாக தொடரில் காலடி எடுத்து வைத்து இந்தியா. ஆனால், அமெரிக்காவுடனான போட்டியில் தொடங்கி அனைத்து முக்கிய போட்டிகளிலுமே நூலிழையிலேயே வெற்றி பெற்று வந்தது இந்திய அணி. கம்பீர் கூறியது போல மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிக்கு பிறகே உண்மையாக பயமில்லாத அணியாக இந்தியா உருவெடுத்தது. அதன் பின்பு விளையாடிய மூன்று போட்டிகளிலும் 250-க்கு இணையாக ரன்களைக் குவித்து, ஆதிக்கத்துடன் இந்தத் தொடரை இந்தியா வென்றது. சஞ்சு சாம்சன் இந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடி 321 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.