மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் மற்றுமொரு மகுடம்! ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது
செய்தி முன்னோட்டம்
பாங்காக்கில் நடைபெற்ற ரைசிங் ஸ்டார் மகளிர் கிரிக்கெட் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. ராதா யாதவ் தலைமையிலான இந்திய அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கி, வங்கதேச அணிக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காமல் அபார வெற்றி பெற்றது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
கூட்டணி
ஆட்டத்தைத் திருப்பிய தேஜல் - ராதா கூட்டணி
ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணி சற்று தடுமாறியது. 44 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தபோது, தேஜல் ஹசாப்னிஸ் மற்றும் கேப்டன் ராதா யாதவ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். தேஜல் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் குவித்தார். ராதா யாதவ் 36 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரும் இணைந்து 69 ரன்கள் சேர்த்ததன் மூலம், இந்தியா 20 ஓவர் முடிவில் 134 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஃபஹிமா காதுன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும், மற்ற பந்துவீச்சாளர்களிடம் இருந்து அவருக்குப் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் இந்தியா பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.
பந்துவீச்சு அபாரம்
சுருண்டது வங்கதேசம்: இந்தியப் பந்துவீச்சாளர்களின் வேட்டை
135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய வீராங்கனை பிரேமா ராவத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் முதுகெலும்பை உடைத்தார். சோனியா மெந்தியா மற்றும் தனுஜா கன்வர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வங்கதேச அணியின் ஏழு வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் 88 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆதிக்கம்
தொடரும் இந்திய ராஜ்ஜியம்
இந்தத் தொடரின் முதல் பதிப்பின் இறுதிப்போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது. அப்போது 31 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையும் அதே வங்கதேச அணியை வீழ்த்தி, ரைசிங் ஸ்டார் மகளிர் கிரிக்கெட் ஆசியக் கோப்பையில் இந்தியா தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சு இந்தத் தொடர் முழுவதும் வெற்றிக்கான முக்கிய ஆயுதமாக அமைந்தது.