இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: தீபக் சாஹர் விளையாட வாய்ப்பில்லை என தகவல்
மூத்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் மீதமுள்ள இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. முதல் போட்டிக்கு முன்னதாக தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அணியுடன் செல்லவில்லை. அதற்கு முன்னதாக, சாஹர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியையும் தவறவிட்டார் சாஹர் அவரது குடும்ப உறுப்பினரின் உடல்நிலையைப் பொறுத்தே அணியில் இணைவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஒருநாள் தொடரில் அணியில் இணைவாரா தீபக் சாஹர்?
குடும்ப உறுப்பினர் முழுமையாக குணமடையும் வரை சாஹர் சிறந்த மனநிலையில் இருக்க மாட்டார் என்பதால், தற்போது அவரை உடனடியாக அணியில் சேர பிசிசிஐ கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், டி20 தொடர் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 31 வயதான தீபக் சாஹர் கடந்த இரண்டு வருடங்களாக காயம் காரணமாக முழுமையாக விளையாட முடியாமல் இருப்பது அணியின் பந்துவீச்சு சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. விரைவில் டி20 உலகக்கோப்பை வரவுள்ள நிலையில், பவர்பிளே ஓவர்களில் அவரது கூர்மையான ஸ்விங் பந்துவீச்சுடன், சாஹர் டி20 அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது.