இந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், புதன்கிழமை (ஜனவரி 3) கேப்டவுன் நியூலேண்ட்ஸில் தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், முதல் போட்டியில் பெற்ற மோசமான தோல்வியை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எந்த மாதிரியான அணியை இந்த போட்டியில் களமிறக்க உள்ளனர் என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர். எனினும், அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் நீக்கப்பட்டு மாற்று வீரர்கள் விளையாடும் லெவனில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தனது அறிமுக போட்டியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா மோசமான செயல்பட்டார். இதனால் அவர் நீக்கப்பட்டு முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் முகேஷ் குமார் இல்லாமல், ஆவேஷ் கானை அணியில் சேர்க்கும் எண்ணமும் நிர்வாகத்திடம் உள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, முதல் போட்டியில் ஜடேஜா விளையாடாத நிலையில், அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், இந்த போட்டியில் ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார் என்பதால், அஸ்வினை கழட்டி விட வாய்ப்புள்ளது. எதிர்பார்க்கப்படும் லெவன் : ரோஹித் ஷர்மா, ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஐஸ்ப்ரீத் பும்ரா, முகேஷ் குமார்.