இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஐடென் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாக, 27.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சாய் சுதர்ஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்
117 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினர். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களில் அவுட்டான நிலையில், சாய் சுதர்ஷன் கடைசி வரை அவுட்டாகாமல் 55 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.