மணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன்
செய்தி முன்னோட்டம்
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் 9வது SAFF சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நேற்று குவைத்தைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது இந்தியா.
வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் பதக்கத்தைப் பெற மைதானத்தில் அணிவகுத்து நின்ற போது, இந்திய மிட்ஃபீல்டரான ஜீக்சன் சிங் மட்டும், தன்னுடைய கால்பந்து ஜெர்சியின் மீது, வண்ணக் கொடி ஒன்றை ஏந்தி நின்றிருந்தார்.
அவரது இந்த செயல் பலரது கவனத்தையும் ஈர்க்கவே, அவர் அது தன்னுடைய சொந்த மாநிலமான மணிப்பூரின் கொடி எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக வன்முறையால் பற்றியெறிந்து வரும் மணிப்பூரின் கொடியை ஏந்தி பரிசு பெற்ற அவர், மைதானத்தை விட்டுச் செல்லும் வரை அந்த கொடியை ஏந்தியபடியே வலம் வந்து கொண்டிருந்தார்.
கால்பந்து
மணிப்பூரின் கொடியை ஏந்திய காரணம் என்ன?
"இந்திய மக்களுக்கும், மணிப்பூர் மக்களும், வன்முறையை கையிலேந்தாமல் அமைதியாக கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தக் கொடியை நான் ஏந்தியிருக்கிறேன்", என, தான் மணிப்பூர் கொடியை ஏந்திய காரணம் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இவரது இந்த செயலை ஏற்றுக் கொண்டு இந்திய ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் அது குறித்து அதிருப்தியும் தெரிவித்திருக்கிறார்கள். ட்விட்டரிலும் தங்களது அதிருப்தியை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் அதிருப்திக்கு பதிலளிக்கும் விதமாக தன்னுடைய விளக்கம் ஒன்றையும் சமூக வளைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார் ஜீக்சன்.
அதில், "அமைதியை வேண்டி மட்டுமே இந்தக் கொடியை நான் ஏந்தினேன். யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல. நேற்றை இந்திய அணியின் வெற்றி அனைத்து இந்தியர்களுக்குமானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.