மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா?
ஒவ்வொரு ஐசிசி மகளிர் போட்டிகள் தொடங்கும் போதும், இந்திய அணிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 2016 இல் லீக் சுற்றோடு வெளியேறினாலும், அதன் பின்னர் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் என கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்து வந்த சூழ்நிலைகளில் இருந்து சரியான பாடம் கற்று, தற்போது டி20 உலகக் கோப்பைக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முழு வீச்சில் தயாராகி உள்ளது.
முழு ஃபார்மில் இந்திய அணி
முன்னதாக, இந்திய அணியின் முகமாக நீண்ட காலம் விளங்கிய மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகிய இரண்டு வீராங்கனைகள் ஓய்வை அறிவித்து வெளியேறிவிட்டனர். பயிற்சியாளர்களை அடிக்கடி மாற்றுவதால் சிக்கலை எதிர்கொண்ட இந்திய அணி, தலைமை பயிற்சியாளர் இல்லாமலேயே டி20 உலகக்கோப்பையில் நுழைந்துள்ளது. இது 2007இல் தோனி தலைமையில் பயிற்சியாளர் இல்லாமல் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதை நினைவுபடுத்துகிறது. கடந்த ஒரு மாதமாகவே தென்னாப்பிரிக்காவில் தங்கி முத்தரப்பு போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி, அங்குள்ள மைதானங்களின் நிலையை முழுமையாக உணர்ந்துள்ளது. இதனால் 2020 டி20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கோப்பையை வெல்ல முடியாத ஏக்கத்தை போக்கி, இந்த முறை கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.