ஹாக்கி உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி!
நடந்து முடிந்த உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சனிக்கிழமை (ஜனவரி 28) தென்னாப்பிரிக்காவை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தனது அணியின் கணக்கை அபிஷேக் திறந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் (11'), ஷம்ஷேர் சிங் (44'), ஆகாஷ்தீப் சிங் (48') ஆகியோரும் அடுத்தடுத்து கோல் அடிக்க, இந்தியா 4-0 என முன்னிலை பெற்றது. 49வது நிமிடத்தில் சாம்கெலோ தென்னாப்பிரிக்காவின் கோல் கணக்கைத் திறந்தார். பின்னர் காசிம் முஸ்தபாவும் (59') மற்றொரு கோல் அடித்தார். இதற்கிடையே சுக்ஜீத் சிங் (58') இந்தியாவின் இறுதி கோலை அடிக்க, 5-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
2023 ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறன்
இந்தியா, இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்பெயினுடன் குழு டி'யில் இணைந்தது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான கோல் எதுவுமின்றி டிரா செய்தது. பின்னர் வேல்ஸை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி, குழு டி'இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். கிராஸ்ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்தித்த இந்தியா, ஷூட் அவுட்டில் தோல்வியை தழுவியது. பிளேஸ்மென்ட் பிளேஆஃப்களில் ஜப்பான் (8-0) மற்றும் தென்னாப்பிரிக்காவை (5-2) அபாரமாக வீழ்த்தி, ஆறுதல் வெற்றிகளை இந்திய அணி கைப்பற்றியது. இதன் மூலம் உலகக்கோப்பை தரவரிசையில், இந்தியா ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் தேசத்தின் மோசமான முடிவு இதுவாகும்.